Wednesday 12 August 2015

சனி பிரதோஷ விரதம்! - சனி மஹா பிரதோஷம்

 துன்பம் போக்கும் சனி பிரதோஷ விரத வழிபாடு:
சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்!

சனி மஹா பிரதோஷம்!
 சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.
         கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இத்தகு கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.
     பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
 பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
 
  பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.


தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.
ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐந்து வகைப் பிரதோஷம் :
1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
சோமசூக்தப் பிரதட்சணம்:

        சிவாலயங்களை பிரதோஷ  காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
  நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும் பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமாக இந்த பிரதட்சணம் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும்.


நாளை சனிக்கிழமை சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!


துன்பம் போக்கும் சனி பிரதோஷ விரத வழிபாடு:

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.

மஹா விஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக மகேந்திர மலையை மத்தாக கொண்டு வாசுகியை கயிறாக கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது பல பொருட்கள் ஐராவதம், கற்பக விருட்சம், மஹா லஷ்மி போன்றவர்கள் பாற்கடலில் தோன்றினர். பின்னர் வாசுகி வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது.

அது மிகவும் கடுமையான ஆலகால விஷமாக அனைவரையும் துன்புறுத்தியது. தேவர்கள் அஞ்சி நாலாபுறமும் சிதறினர். தேவர்கள் பால் இறக்கம் கொண்ட சிவபெருமான் விஷத்தை திரட்டி விழுங்கி விட்டார். அதே சமயம் அது உள்ளே இறங்காதபடி பார்வதி தேவியார் கழுத்தை பிடித்து விட்டார்.

விஷம் கண்டத்தில் தங்கியது சிவன் திரூநீல கண்டன் ஆனார். அந்த விஷத்தின் பாதிப்பு நீங்க சிவன் பார்வதியுடன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிந்தார். இதுவே பிரதோஷ வரலாறு. ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

சனி பிரதோஷ விரதம்
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்... சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது. நஞ்சை உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றிய பின்னர், மயக்கமுற்ற நிலையில் அன்னை மடி மீது சாய்ந்திருக்கின்ற தோற்றம்...

வேறெங்கும் காண இயலாது. திருவள்ளூர் அருகில் ஊத்துக்கோட்டையிலிருந்து 8 கி.மீ தூரத்தில், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இத்தலத்தில் திருச்சடாரி சூட்டப் பெறுவதும் மற்றொரு சிறப்பு.

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும்.

மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று உபாயம் கூறினார்.

இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர்.

`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்' என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும்.

அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்' என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று.

இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.

இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது.

இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்' என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்' என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர்.

அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!' என்று உத்தரவிட்டார்.

சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள்.

`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே' என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது.

மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.

தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர்.

இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்' என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment