Thursday 30 July 2015

சனி ஜெயந்தி: வளமான வாழ்வு தரும் சனி பகவான்

சனி ஜெயந்தி: வளமான வாழ்வு தரும் சனி பகவான்

இந்துக்களின் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும், பின்னி பிணைந்தவை. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு பண்டிகையும், விரத

வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவக்கிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவக்கிரகங்களில் பிரதானமாக இருப்பது சனி கிரகமாகும். இவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தை அளிப்பவராக இருக்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார். கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. ஒருவரைப் பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே நேரில் வந்து விட்டால் ‘உங்களுக்கு நூறு ஆயுசு‘ என்று சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வச் செழிப்புடனும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.

இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். தடை, தடங்கல்களை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த உதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம், லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். உழைப்புக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சனீஸ்வரர். கடும் உழைப்பாளிகளுக்கு என்றும் துணையாக இருப்பார். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. அதேபோல் சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை சொல்லொணாத துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான். அதேபோல் கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். 7-ல் சனி, 4-ல் சனி, 8-ல் சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகளுக்குள் இந்த மூன்று விதமான கோச்சார பலன்களை தருகிறார்.

பலன் தரும் பரிகாரங்கள்

‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்து கொள்கிறான்‘ என்பது ரமணரின் வாக்கு. இதற்கேற்ப கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், பார்வையற்றோர், மாற்று திறனாளிகள், நோயாளிகள், ஆதரவற்றோர், முதியோர் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும், சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனிக்கிழமை விரதம் இருந்து காகத்திற்கு உணவிடலாம். மாலையில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து கருப்பு உளுந்து கலந்த கிச்சடி செய்து தானம் தரலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ காலத்தில் தயிர் சாதம், புளி சாதம் தானம் செய்யலாம்.

நவக்கிரக ஸ்தலங்களில் திருநள்ளாறு சனீஸ்வர ஸ்தலமாகும். நவ திருப்பதிகளுள் பெருங்குளம் பரிகார ஸ்தலமாகும். இந்தியாவின் மிகப்பெரிய சனீஸ்வரர் கோயில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் பாய் என்ற கிராமத்தில் உள்ளது. வடக்கு பார்த்த விநாயகரும் தெற்கு பார்த்த அனுமனும் இங்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியன்று இங்கு 5 நாட்கள் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. இந்த சனி ஜெயந்தி அன்று சனிபகவான் அருள் வேண்டி பிரார்த்திப்போமாக.

சனியின் அம்சங்கள்

கிழமை: சனி

தேதிகள்: 8, 17, 26.

நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

நிறம்: கருப்பு

ரத்தினம்: நீலக்கல்

தானியம்: கருப்பு எள்

ஆடை: கருப்பு

ராசி: மகரம் - கும்பம்.

உச்சம்: துலாம்

நீசம்: மேஷம்.

விரல்களில் சனி விரல் நடு விரலாகும். அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு சனி மேடாகும்.

No comments:

Post a Comment