Thursday 9 July 2015

சென்னையில் கூவம் நதிக்கரை ஓரங்களில் எழில்மிகு நடைபாதைகள், பூங்காக்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது.

சென்னை: சென்னையில் கூவம் நதிக்கரை ஓரங்களில் எழில்மிகு நடைபாதைகள், பூங்காக்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது. அதற்கான முதல் கட்ட பணி நேப்பியர் பாலம் முதல் சேத்துப்பட்டு பாலம் வரை நடைபெற உள்ளது. இதன் மூலம் கமகவென மணக்கும் சென்னையின் அடையாளமான கூவத்திற்கு புது முகம் கிடைக்கவுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் கூவம் நதிக் கரையிலும் இனி மக்கள் இளைப்பாறும் வாய்ப்பு உருவாகும்.கூவம் நதிக்கரை ஓரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை வாசி மக்கள் இதமான காற்றை ரசித்த வண்ணம் நடைபயிற்சி செய்தும், சைக்கிள்களை ஓட்டியும் தங்கள் உடல் நிலையை பராமரிப்பதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது.இதற்காக "கூவம் நதி சீரமைக்கும் அறக்கட்டளை" பண உதவி அளிக்க இருக்கின்றது. அதற்கான முழு பணிகளையும் மாநகராட்சி ஏற்று நடத்த உள்ளது. மேலும் பொதுப்பணித் துறையினரும் சில பணிகளை இணைந்து செய்கின்றனர். இந்த திட்டப்பணி குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், "கூவம் நதி கரையோரங்களில் இயற்கை காற்றுகளை ரசித்தவாறு நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்றவிதமாக நடைபாதைகள் அமைப்பதற்காகவும், பொழுதுகளை கழிப்பதற்கு ஏதுவாக அந்த பகுதிகளில் பூங்காக்கள் அமைப்பதற்காகவும் மாநகராட்சி திட்டமிட்டு கூவம் நதி சீரமைக்கும் அறக்கட்டளையிடம் தெரிவித்தது.அதற்கு அவர்கள் முழு பண உதவியும் அளிக்கின்றனர். இதற்கான அனைத்து பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை மொத்தம் 29 கிலோமீட்டர் நடைபெற இருக்கிறது. அதில் தற்போது முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் சேத்துப்பட்டு ரயில்வே பாலம் வரைநடைபாதைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு தற்போது முடிந்துள்ளது.முதற்கட்டமாக அமைக்கப்பட இருக்கும் திட்டத்துக்கான மதிப்பீடு ரூபாய் 32.17 கோடி ஆகும். டெண்டர் முடிவடைந்துள்ள நிலையில், "கூவம் நதி சீரமைக்கும் அறக்கட்டளை" தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் தடையில்லா சான்றிதழ் கொடுத்தபிறகு, முதலில் பொதுப்பணித்துறை கூவம் நதியில் உள்ள மணலை அகற்றுவார்கள். பின்னர், மாநகராட்சி கட்டிடப்பிரிவை சேர்ந்தவர்கள் கூவம் நதிக்கரை ஓரம் சுற்றுச்சுவர் எழுப்புவார்கள்.  அதையடுத்து தான் நடைபாதைகள், பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும். இதில் கூவம் நதி ஓரத்தில் 3 மீட்டர் அகலத்தில் நடைபாதைகள், சைக்கிள் களை ஓட்டி செல்வதற்கு வசதியாக 3 மீட்டர் அகலப்பாதைகள் என நேப்பியர் பாலம்-சேத்துப்பட்டு ரெயில்வே பாலம் இடையே ரூ.9.83 கோடி செலவில் 4 நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன" என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment