Monday 27 July 2015

சிவனை பிடித்த சனி

சனி சிவபெருமானை பிடிக்க வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார் சனி பகவான். அவருக்கு சட்டென ஞாபகம் வந்தது நாரதரை கேட்டால் என்ன என்று. அதனால் அவரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார் சனி பகவான். கவலை வேண்டாம்; திருக்கயிலையில் சிவ சக்தியின் திருமணம் நடைபெற போகிறது. தேவர்கள் திரளாகக் கலந்து கொள்வர். நாமும் கல்யாணத்துக்குப் போவோம். அப்போது நீ சிவபெருமானின் உடலுக்குள் புகுந்து விடு என்றார் நாரதர். அதன்படி இருவருமாகச் சேர்ந்து திருமணத்துக்குச் சென்றனர். திருமணம் இனிதே நடந்தேறியது. சிவனாரும் பார்வதியும் அனைவரையும் வாழ்த்தினர். அப்போது புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார் நாரதர். உடனே பார்வதிதேவி பிரம்மாவின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையில் தீபம் காட்டி நன்றி கூறுகிறோம் என்றாள். அதன்படி நான்கு திசைகளில் சிவனாரும், பார்வதி தேவியும் தீபம் காட்டி பிரம்மாவை வணங்கினர். நான்கு தலைக்கு நான்கு திசைகள் முடிந்தது; ஐந்தாவது தலைக்கு திசையின்றி தவித்தனர்! அப்போது நாரதர் சைகை காட்டவும் சட்டென்று சிவபெருமானின் உடலில் புகுந்த சனிபகவான் தனது வேலையைத் துவக்கினார்! ஆத்திரத்துடன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் சிவபெருமான். இதில் கோபம் கொண்ட பிரம்மன் உமது கையில் உள்ள என் தலை திருவோடாகட்டும்; பித்தனாக, பேயனாக சித்தம் கலங்கி பூலோகத்தில் பிச்சை எடுப்பாய்! என்று சாபமிட்டார். அதன்படி பரதேசிக் கோலத்தில் கையில் திருவோட்டுடன் பூலோகத்துக்கு வந்தார் ஈசன். ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்தார். அப்படிச் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தினார். அப்படியே கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை கிராமத்துக்கு வந்தார். ஊர் அடங்கிய வேளையில் பரதேசி கோலத்தில் வந்த சிவனாரை, ஊரின் காவல்காரரான பாவடைராயனுக்கு அடையாளம் தெரியவில்லை! சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர், சிவபெருமானை விலங்கிட்டு சிறையில் அடைத்தார். விடிந்ததும் விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி சென்றார் பாவாடைராயன். விடிந்ததும் வந்து பார்த்த பாவாடைராயனுக்கு சுயரூபத்தைக் காட்டினார் சிவபெருமான். நடுநடுங்கிப் போன பாவாடைராமன், ஐயனே! உங்களையா சிறை வைத்தேன் என்று பதறினார். என்னை மன்னியுங்கள். உங்களுக்கு அடியவனாக இருந்து பணிவிடை செய்ய விரும்புகிறேன். ஆகவே உங்களது சாபம் நிவர்த்தியாகும் வரை, இங்கேயே இருங்கள் ஸ்வாமி என்று கெஞ்சினார். சிவனாரும் சம்மதித்தார். பரதேசியப்பராக வல்லம்படுகை எல்லையிலேயே தங்கினார். இவரே பின்னாளில் பருதேசியப்பர் எனப்பட்டார். இவருக்குக் காவலாக, கீழ்ப்புறத்தில் பாவாடைராயனும் அங்கேயே ஐக்கியமானார்!

சனீஸ்வரனின் சிறப்பம்சங்கள்

No comments:

Post a Comment