Friday 31 July 2015

சனி ஊனமான கதை! - சனி மெதுவாக செல்லக் காரணமான கதை

பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரனுக்கு பிறந்த குழந்தை. அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது. அதனால் கையிலையில் பிள்ளையாருக்கு ஆயுஸ்ஹேமம் மற்றும் விழா நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கலந்து சிறப்பித்த விழா அது. அதில் சூரியனின் மனைவியும், நிழலுக்கு தேவதையும் ஆன சாயாவும், அவர்களின் பிள்ளை சனியும் கலந்து கொண்டார். சனி சூரியன் புத்திரன் ஆனதால் அவரிடம் ஒரு விசேச குணம் இருந்தது. அது என்ன என்றால் அவர் யாரையாது நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தால் அவர் தலை வெடித்துச் சிதறிவிடும். ஆதலால் சனி எப்போது தலை குனிந்து இருப்பார். சனியின் பார்வை அவ்வளவு பவர்.  விழா நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போது பார்வதிக்கு பெருமை தாங்கவில்லை. அந்த பெருமையின் காரணமாய் கொஞ்சம் ஆணவமும் தலைதூக்கியது. சனிக்கு குழந்தையைப் பார்க்க ஆர்வம்,ஆனால் தன் சக்தியின் காரணமாக தலை குனிந்தே இருந்தார். ஆனால் பார்வதி காரணம் கேட்ட போது சாயா,சனியின் பவரைப் பற்றிக் கொஞ்சம் பெருமையாக சொல்லி விட்டாள். இது பார்வதியின் ஆணவத்தை மேலும் கூட்டியது. பார்வதி கொஞ்சம் கர்வத்துடன், சாயா பிள்ளையார் எங்களின் புதல்வன். அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் சர்வேஸ்வரனின் புதல்வன். ஆகையால் சனியின் சக்தி அவரை ஒன்றும் செய்யாது, ஆதலால் உன் பிள்ளையைப் பார்க்கச் சொல். ஒன்றும் ஆகாது என்றாள் கர்வத்துடன்.ஆனால் சாயா மறுக்க, பார்வதி பிடிவாதமாக இருந்தாள். அவளுக்கு ஈஸ்வரன் மற்றும் தன் சக்தியின் குழந்தை ஆதாலால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை. ஏற்கனவே குழந்தையைப் பார்க்கும் ஆவலில் இருந்த சனியும் குழந்தைதான். ஆசையின் காரணமாக சனி நிமிர்ந்து பார்த்தார். பிள்ளையாரின் தலை வெடித்து சிதறியது. இதைப் பார்த்த பார்வதி செய்வது அறியாது புலம்பினாள். விழா வீடு, இழவு வீடாகியது. நடந்த சம்பவங்களைப் பார்த்த ஈஸ்வரன் வடக்கில் தலை வைத்துப் படுத்து இருந்த யானையின் தலையைக் கொய்து பொருத்தினார். பிள்ளையாருக்கு உயிர் வந்தது. யானை முகத்துடன் மனித உடலுடன் விளங்கினார். அழகாய் இருந்த குழந்தை இப்படி போனதில் பார்வதிக்கு எல்லையற்ற கோபம் பெருகியது. தன் கோபம் மேலிட சனிக்கு சாபம் தந்தாள். பார்வதி பெரும் சினத்துடன் " சனியின் பார்வை மந்தமாக போகக் கடவுது. சனியைக் கண்ட மக்கள் பயப்படக் கடவது, என்றும். என் பிள்ளை அவலட்சனமாக இருப்பது போல சனியின் கால்களும் முடமாக போகட்டும் என்றாள். அவளின் கோபமும்,சாபமும் கண்ட சாயா. தான் பலமுறை சொல்லியும் கேளாது பார்க்கச் சொன்னது நீதானே. இப்போது சாபம் கொடுத்தால் எப்படி என்று கோபமுற்ற அவள் பிள்ளையாரை மனிதர்கள் ஆற்று மேட்டிலும், மரத்தடியிலும் காட்டிலும் வைத்து வணங்கட்டும் என்று சாபமிட்டாள். பெண்களின் சண்டை, குழாயடிச் சண்டையானது. இதைக் கண்ணுற்ற சிவபெருமான் இருவரையும் சாந்தப் படுத்தினார். பின்னர் பிள்ளையாரின் தலை மாறியது விதியின் வசத்தால் தான். பிள்ளையார் கஜமுகாசூரன் மற்றும் மேஷிகா சூரனை வதம் செய்யத்தான் இந்த உருவம் கிடைத்தது என்றும் கூறி அவர்களை சமாதனப் படுத்த வரங்களைக் கொடுத்தார். பிள்ளையாரின் வடிவம், நீங்கள் நினைப்பது போல அவலட்சணம் அல்ல. அது ஓம் என்னும் பிரணவ வடிவம் ஆகும், என்றும் இன்றில் இருந்து பிள்ளையாரை மக்கள் விக்கினேஸ்வரன் என்று அழைப்பார்கள். மக்களின் விக்கினங்களைப் போக்கும் தலைவன் என்பதால் விக்கினேஸ்வரன் என்னும் ஈஸ்வரப் பட்டத்தைக் கொடுத்தார். இவருக்கு எல்லா முதல் வழிபாடும், முதல் மரியாதையும் கிடைக்கட்டும். பிள்ளையாரின் பூஜைகள் நடக்காமல் ஒரு வழிபாடு நடந்தால் அதில் பலன் இல்லை என்றும் வரம் கொடுத்தார்.

No comments:

Post a Comment